Tuesday, 3 September 2013

அபிஷேகம்





"புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு" என்பது திருமுறை. மானிடராகப் பிறந்த ஒவ்வொருவரும் வழிபாடு செய்வது இன்றியமையாதது. வீடுகளில் செய்யப் பெறுவது ஆத்மார்த்த வழிபாடு. திருக்கோயில்களில் நிகழ்த்தப் பெறுவது பரார்த்த வழிபாடு. இவ்விரண்டிலும் இறைவன் திருவுருவங்களுக்கு அபிஷேகம், அர்ச்சனை முதலியன நிகழும். அபிஷேகத்திற்குரிய திரவியங்கள் இவை என்பதையும், அவற்றின் பயன்களையும், அதுபோல மலர்களின் மாட்சியும் அவற்றை இறைவனுக்குச் சாத்துவதால் உண்டாகும் நன்மைகளையும் அறிந்துகொள்வது அவசியம். எவ்வித வழிபாடாக இருப்பினும் புறந்தூய்மையும் அகந்தூய்மையும் வேண்டும். புறந்தூய்மை நீரால் அமையும் ஆதலால் வழிபாட்டிற்கு முன்னர் நீராடி, தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து தூயவராக விளங்கவேண்டும். திருநீறு முதலிய சமய அடையாளங்களும் தேவை. ஐம்புலன்களாலும் மனம் சலனமடையாமல் இறை வழிபாட்டில் ஒன்றுதல் வேண்டும்.

திருக்கோயிலுக்குச் செல்லும்போது இறைவழிபாட்டிற்குரிய மலர்கள், அபிஷேகத் திரவியங்கள், தூபம், தீபம் முதலியவற்றிற்கான பொருள்களைக் கொண்டு செல்லவேண்டும். வழிபாட்டிற்குரியனவற்றை இடுப்பிற்குக் கீழே இருக்குமாறு எடுத்துச் செல்லக்கூடாது. இரு கைகளாலும் கொண்டுசெல்ல வேண்டும். தூய்மையான இடங்களில் வைக்கவேண்டும்.



சிவனைத் தூய நல்லெண்ணையில் வாசனைத்திரவியங்கள் கலந்து அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.
கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேகத்தினைப்பெறலாம்.

சுத்தமான பசுவின் கறந்த பால் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.
சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் மனதுக்கமும், இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும்.
எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிடும்.

சர்க்கரையினால் அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.
இளநீர் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும்.
சேர்த்து செய்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் ரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

தயிர் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.
கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை பெற்று விளங்கும்.
மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.
திராட்சை ரசம் செல்வத்தினை அளிக்கும்.

பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் இகபரசுகங்களில் இருந்து நம்மை விடுவித்து சொர்க்க நிலையை நமக்கு அளிக்கும். அரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை விடுவிக்கும்.

அன்னாபிஷேகம், அரிசியால் அன்னம் சமைத்து அதனை லிங்கஸ்வரூ பமான சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வயிற்றில் உண்டாகும் சகலவிதமான நோய்களும் பஞ்சாகப் பறந்துவிடும்.
தூய்மையான மங்களகரமான கங்கை நீர் நூறு குடம் கொண்டு அபிஷேகம் செய்தால் மனத்திலுள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, பயம் போய், மனநிம்மதி உண்டாகும்.

சந்தனக்குழம்பினைப் பன்னீரில் கரைத்து அபிஷேகம் செய்தால் இறைவனிடம் மாசற்ற பக்தி உண்டாகி அஞ்ஞானம் விலகும்.
ருத்ரம் ஜபித்த ஆயிரம் கலசங்களில் வைக்கப்பட்டுள்ள கங்கை நீரால் கங்காதரனைக் குளிர்வித்தால் மந்திரசித்தி ஏற்படும்.

ஈசனின் திருமேனியில் இருந்து தோன்றிய விபூதியினால் அபிஷேகம் செய்ய சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
தங்கத்தாமரை மொட்டுகள் செய்து அதனால் அபிஷேகம் செய்தால் சொர்க்க போகம் கிடைக்கும்

No comments:

Post a Comment